Friday, February 15, 2008

நலம், நலமறிய நக்சல்பரி...

நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.
உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.
.
கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்
ஒரு இழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.
.
அங்கங்கே ஆள் வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து
எத்தனை முறை கிளப்பினாலும்
எழுப்ப முடியவில்லை
'எம்ப்ளாய்மெண்ட்' எண்ணை.
.
ராகு மூணாம் இடம் போகிறார்
கேது நாலாம் இடம் வருகிறார்
கேட்ட பவுனைப் போட முடியாததால்
அக்காமார்கள் மட்டும்
அடுப்படியிலேயே கிடக்கிறார்கள்.
.
ரேசன் அரிசி வடித்த கஞ்சியில்
சலவை செய்த உயிரை உடுத்தி உடுத்தி
ராத்திரி அறுப்புக்குப் போய் வந்து படுத்த
அம்மாவின் கண்கள்
கடைசிவரை திறக்கவே இல்லை..
.
ஊரெல்லாம் கடன்பட்டு
தலைமறைவு வாழ்க்கை நடத்தும்
உங்களுக்குத் தெரியாதா?
புரட்சிக்குக் கடன்படாமல்
இனி இயங்க முடியாது என்பது.
..
-துரை.சண்முகம்

Thursday, February 14, 2008

"சுயநல அறிவுஜீவிகள்"


"ஏ சுயநல அறிவுஜீவிகளே !

நீங்கள் தப்பமாட்டீர்கள் !
..
உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்

இடம் பிடிக்க முடியாதவர்கள்

ஆனால்

உங்களுக்கு உண்டி சமைக்கும்

உங்களுடைய ஆடையை விடுக்கும்

உங்களுடைய காரை ஓட்டும்
உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும்

உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும்

அவர்கள் வந்தவுடனே
விசாரனை துவங்கும்.

ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்

எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது

ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே

நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

- ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி

பசுத்தோல் போர்த்திய கேள்விகள்

என்னையும்
எப்படி இந்துவாக்கினர்?
..
யாரெல்லாம்
இசுலாமியர் இல்லையோ
யாரெல்லாம்
கிறித்தவர் இல்லையோ
என்பதில் தொடங்கி
யாரெல்லாம்
மனிதர்கள் இல்லையோ
என்ற பரிணாமத்தில்
மாட்டிக் கொண்டேனோ நானும்?
..
எப்படி நானும்
இந்துவாய்....
..
"சூத்திரன்"- என்ற சங்கரமடத்தின்
கழிப்பறை வாக்கியத்தை
பெரும் "பாக்கியம்"
என்று சுமந்து திரியும்
தாமரைக்கனியின்தோலைப்
போல
எனக்குத் தோல் தடிப்பில்லையே!
..
தமிழ் "நீச பாஷை" என்றுமுகம்
சுளிக்கும் சங்கராச்சாரிக்கு
அன்றாடம்"அம்மா"
என்று அழைக்கும்
என்மே கரிசனம் வந்ததெப்படி?
..
நான் சாணிபோடும்
ஓசைசமஸ்கிருதமோ?
எங்கள் குடும்பக்காளைகளைக
சாப்புக்கு அனுப்புவதைக்கண்டு
கொள்ளாமல்
எம் மேல் மட்டும்பாசம் வந்ததென்ன?
பெண்டாளும் தந்திரம்
மாடுகளை வரையிலுமா!
..
வேள்விகளில்
உயிரோடு எரிக்கப்பட்ட
எம் மூதாதையர்களின்
வாரிசுகள்
நாங்கள்வழக்காடுகிறோம்....
..
இந்துவாக
இருந்ததில்லை நாங்கள்
வைக்கோல் மொம்மைகளைக்
காட்டும் போனும்
வாஞ்சையுடன் சுரக்கும்எம்
..
பால்மடி
வழியும் கண்ணீரையும்
நடுங்கும்
முகங்களையும் கூட
விடாது
பசியாறும் இந்து மதவெறி
..
எப்படி நாங்கள்
இந்துவாக முடியும்?
..
எம் சந்ததிப் பகையே
சங்கர மடமேவேண்டாம்
விலகுஉழைக்காத வகையினம்
என்றுஎன்மேல் உள்ள குற்றச்சாட்டை
உறுதி செய்வதாய் இருக்கிறது
உனது ஒட்டுறவு
..
எப்படி பொருந்தும்?
கரப்பதே என் பாடுகறப்பதே
உன் பண்பாடு
பனிக்குடம் உடையும்
முன்பேசீம்பாலுக்குச் செம்பு தேடும்
உன் வக்கிரங்களுக்கு
மத்தியில்வாழ்வதைவிட
கன்றின் கறியை காமுற்ற
யாக்ஞவல்கியனின் சந்ததியிடம்
..
உயிர்பிச்சை பெறுவதைவிட
செத்த பின்பும்
சினை பார்த்து அறுக்கும்
எம் மக்களுக்கு உணவாகவே
எனக்கு சம்மதம்
.
இந்துவாக வாழ்வதைவிட
விலங்காகச் சாவதே
எனக்குச் சம்மதம்
..
-துரை.சண்முகம்

எப்படி இனிக்கும்?

பிள்ளைகளே,
புரட்சி எத்தனை இனிப்பானது
தெரியுமா?
..
அதிகாலை எழுந்து
அவசரமாக குளித்து
..
நீங்கள் தின்னும்
தீபாவளிப் பலகாரங்களை விட
சகல பணிவோடும்
..
சர்ச்சுகளில் நீங்கள் சுவைக்கும்
அப்பத்தை விட.
..
பாத்தியா ஓதி
பள்ளிவாசலில் தின்னும்
சர்க்கடையை விடபுரட்சி எத்தனை
இனிப்பானது தெரியுமா?
..
எப்படி இனிக்கும்?
..
லட்டுவைப்போலக் கிறங்க வைக்குமா?
சாக்கலேட் போல எச்சி ஊறுமா?
சொல்லத்தெரியவில்லை எனக்கும்
என்றாலும் - அது
அப்பேர்ப்பட்ட இனிப்பு!
..
முதல் சக்கலேட்டுக்காக நீ
அம்மாவிடம் அழுதாயே
அப்பாவிடம் அடம் பிடித்தாயே
அப்போது/உன் நாக்குக்கு மட்டும்
தெரிந்தா இருந்தது
சாக்கலேட்டின் இனிப்பு?
..
எனக்கும் அப்படித்தான்
எவ்வளவு அழுகிறாயோ
அவ்வளவு இனிப்பு
எவ்வளவு அடம் பிடிக்கிறாயோ
அவ்வளவு இனிப்பு
எவ்வளவு போராடுகிறாயோ
அவ்வளவு இனிப்பு.
..
அழு,அடம்பிடி,போராடு
பொறுக்க முடியாமல் போன பிறகாவது
உன் அப்பன் கேட்க வேண்டும்
"அப்படி என்னதாண்டா இருக்கு
அந்தப் புரட்சியில்" என்று.
..
-துரை.சண்முகம்
..
சென்னையில் நடந்த நவம்பர் புரட்சி நாள் விழாவில் குழந்தைகளின் குதூகலமாக பங்கேற்பைப் பார்த்தவுடன் எழுந்தது இந்தக் கவிதை.

"காட்டு நடனம்"

சித்திரவதைச் செய்யப்பட்ட
எங்கள்
மார்புகளில் இருந்து
வசீகர வயலின்கள்
உயிர்த்தெழும்பும்
சுருள் வேலிக் கம்பிகள்
அவற்றின் தந்திகளாய்
நாதமெழுப்பும்
உடைந்த
எழும்புத் துண்டுகளோ
புல்லாங்குழல்களாய்
முகிழ்த்தெழும்பும்
அங்கு
ஒரு காட்டு நடனம்
அனல் கக்கும்.
..
- மிக்கிஸ் தியோடோ ராகிஸ்
(கிரேக்க கவிஞர், அரசியல் ஆய்வாளர்)

Monday, February 11, 2008

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது!


வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும்,அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

ஆட்டிவிடும்போது
தொலைகாட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது முன்வாசலில்
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் 'ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுகென்று முகத்தை திருப்பி
'கோலங்கள்'
குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.

மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.

"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!" என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று
ஊரை விட்டே ஓடியது.

துரை.சண்முகம்

இயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம்


பொதுவாய்ப் பேசினால்
புரட்சிக்குக் கூட
ரசிகர் மன்றங்கள் கூடும்.

கொஞ்சம்
குறிப்பாய்ப் பேசுவோமே.

எந்தக் கவிதை
நான் பாட
கண்ணில் தெரியும் பூக்களையா
காலில் குத்தும் முட்களையா
இலக்கியத் தேனீக்களுக்கு
எங்களிடம் சரக்கில்லை.

முதலில் கவிதைகளைக்
காயப்படுத்துவோம்
உள்ளேயிருப்பது
ரத்தமா, சீழா என்ற ரகசியம்
தெரியும் அப்போது.

அசை போட்டாலே
போதுமென்றால்
இங்கு மாடுகள் கூட
மரபுக் கவிஞர்கள்

வார்த்தைகளை அசைப்போட்டல்ல
வாழ்க்கையை அசைப்போடு
வரட்டும் புதுக்கவிதை.

எல்லா இன்பங்களையும்
சாதாரணமாக்கிவிடுகிறது
கம்யூனிஸ்டாய்
வாழ்வதன் இன்பம்.

எல்லா துன்பங்களையும்
சாதாராணமாக்கிவிடும்
கம்யூனிச உணர்வை
இழப்பதன் துன்பம்.

சிலருக்குக்
கம்யூனிசம் பிடிக்கிறது
கட்சி பிடிக்கவில்லை.
தேனை பிடிக்கிறது
மகரந்தக் கிண்ணம்
பிடிக்கவில்லை.

எல்லாம் சரி
எப்போது வரும் புரட்சி
எப்போது வரும் மழை
என்பது போல
மலைக்கிறார்கள் சிலர்.

வானில் இடிபாடுகள்
இருந்தால் மட்டும் போதாது
வளி மண்டலத்தின்
வலுவான இயக்கமின்றி
வராது மழையும்.

வாழ்க்கையில் இடிபாடுகள்
இருந்தால் மட்டும் போதாது
வலுவான இயக்கமின்றி
வராது புரட்சி கூட.
வாருங்கள் இயக்கத்திற்கு!

- துரை. சண்முகம்

வசந்தத்தின் இடி முழக்கம்

இடி முழக்கங்கள்
இல்லாதது போல்
தோன்றும் காலமிது
..
வசந்தங்களின் வழியிழந்து
விடியலின் பூபாளங்கள் பொய்யாய்ப்
பழங்கதையாய் மெல்லப் போனதுவாய்
புரட்சியையும் தோன்றச் செய்யும்
புரட்டல்களின் காலமிது.
..
கல்கத்தாவின் வீதிகளில்
உறைந்த இரத்தத்தில்
உதிரக் கவுச்சியில்
இந்த தேசத்தின் புரட்சி
வரலாறு பொதிந்து கிடக்கிறது.
..
முதலாளித்துவம்
மார்க்கண்டேயவரம்
பெற்றதாய்
மறுபடியும் மறுபடியும்
உச்சாடனங்கள்!
..
நெரிக்கப்பட்ட குரல் வளைகளிலிருந்து
எழும்பிக் கொண்டிருக்கின்றன
சொற்கள் - இந்த முறை
வசந்தம் வந்தே தீரும்.
..
- அரசு

Sunday, February 10, 2008

இப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா !

இனியும், உன் தலை
நிலம் நோக்கி....?
வேண்டாம் இந்த வெட்கக்கேடு.
முற்றுபுள்ளியை
முதலில் அடிமைச்சாசனத்தின்
நெற்றியில் வை.
உன் கையில் பற்றியுள்ள
மரக்குச்சிகலைத் தூக்கித் தூற எறி.
ஆதிக்க வர்க்கங்களின்
விலா எலும்பினை உடைத்து
பறையிசை எழுப்பு,
அசுர கானம் முழங்கி
விழாவினைத் துவங்கு.....
எத்தனை நூற்றாண்டுகள்
நம் முதுகில் அவர்களின் கால்கள்?
அந்த வர்க்கங்களின்
நரம்புகளை உருவி, அதில்
அவர்களின் சுயநல
இதயங்களைக் கோர்த்து
வண்ணக் காகிதங்களைப் போல்
உன் வீதி முழுவதும்
தோரணங்கள் கட்டு
உணவு,
உடை,
வீடு,
நிலம்.... அனைத்தும் ஆக்கிரமித்த
அவர்களின் கோரப்பிடியிலிருந்து
அத்தனையும்
பறிமுதல் செய்து
எதுவுமே இன்றி நிற்கும்
உன் பாட்டாளித் தலைமுறையின்
பாதங்களுக்குக் கீழ் பரப்பு.
ஒவ்வொரு நெல் மணியும்
ந்ம் குருதியில் பிரசவித்த வலியை
நானும் நீயும் மட்டுமே
உணர்ந்திட முடியும்.
நம் வீட்டுப் பாத்திரங்களில்
காற்று நிரம்பி இருக்க,
விளைந்ததைத் தின்றுவிட்டுச்
செரிக்காமல் நடைபயிலும்
அவர்களுக்கு எப்படித் தெரியும்
நம் வயல் வெளித்தவங்கள்?
தெரிவிக்கத்தான் வேண்டும்
பூமியெங்கும் வேர்களாய்
நம் கால்களை இறக்கி
மரங்களென நின்று
அதையும் மீறி
யாராவது நம்மை அசைக்க
முயற்சித்தால்......
இதுவரை,
நிலத்தை மட்டுமே பிளந்த
கலப்பையின் கொழுவை உருவி
அவர்களின் நெஞ்சில் இறக்குவோம்.
எத்தனை நாள்தான்
நீயும் நானும் மட்டுமே
குருதியினைச் சிந்துவது?
***************************
கவிதையும், ஒவியமும்
முகிலன்

நிலத்தைப் பழிக்கும் நெல்லுமிரட்டிகள்?

"கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்
கருத்துரிமை பறிபோகு" மென்று
முறுக்கிக் கொண்டு போன
கதாசிரிய நண்பனைக்
காணநேர்ந்தபோது
தயாரிப்பாளர் சொல்லச் சொல்ல
தயக்கமில்லாமல் தனது கதையை
நறுக்கிப் போடுக் கொண்டிருந்தான் அவன்.
..
"புரட்சி, போராட்டம் இதெல்லாம்
என் இளகிய இதயத்தில் - இயலாது
இயக்கத்தில் சேரமாட்டேன்" என
பழக்கத்தை முறித்துக் கொண்ட
பழைய நண்பனைப் பார்க்கப் போனால்
ஆட்டுக்கறி உரிப்பது போல
ஒரு பெண்ணின் அங்க அவயங்களை
பாட்டில் பச்சையாக உரித்துக் கொண்டிருந்தான்
" என்னடா இப்படி" என்றால்
சினிமாவில் சேர்ந்துவிட்டேன் என
சிரிக்கிறான் கோரமாக.
"இலக்கியவாதிகளுக்கே உரிய அடையாளம் கிடைப்பதில்லை....
கட்சிகள் வாகனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என
காட்டமாகப் பேசிய இலக்கியவாதியை தேடிப் போனால்
" ஓ அந்த ஆம்வே (AMMY) ஏஜெண்ட்டா" என
அடையாளம் காட்டிகிறார்கள் தெருவாசிகள்.
"எனக்கு இலக்கியம் பண்ணத் தெரியும்
அரசியல் பண்ணத் தெரியாது" என்று
இரட்டுற மொழிந்து
விலகிச் சென்ற நண்பனை விசாரித்தால்
இப்போது பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வீடாம்.
எப்படியெனக் கேட்டால்
கனிமொழியின் இலக்கியச் சந்திப்பால் வந்த கோட்டா
என்கிறார்கள் கூட இருப்பவர்கள்.
..
"வீரமிக்க தமிழ்மணம்
இப்போது ஈழத்திலிருக்கிறது" என்று
கவியரங்குகளில் கைதட்டல்களை எழுப்பும்
அண்ணணைத் தேடினேன்,
'வாடி வாடி நாட்டுக்கட்டை' க்கு அடுத்த வரிகளைத் தேடி
அவர் ஆத்துப் பக்கம் போயிருப்பதாய்த் தம்பிகள் சொன்னார்கள்.
மலம் உருட்டும் வண்டுகள் கூட
வெளிப்படையாய் இறங்குகின்றன
மனங்கரத் துடிக்கும் இலக்கியவாதிகளே
நீங்கள் மட்டும் ஏன் இப்படி?
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் ஜூலை 2003 இருந்து
************************************************
(குறிப்பு: நெல்லுமிரட்டி என்பது நெல்லுடன் சேர்ந்து வாழும் நெற்பயிரைப் போலவே தோற்றமளிக்கும் களை)