Thursday, February 14, 2008

எப்படி இனிக்கும்?

பிள்ளைகளே,
புரட்சி எத்தனை இனிப்பானது
தெரியுமா?
..
அதிகாலை எழுந்து
அவசரமாக குளித்து
..
நீங்கள் தின்னும்
தீபாவளிப் பலகாரங்களை விட
சகல பணிவோடும்
..
சர்ச்சுகளில் நீங்கள் சுவைக்கும்
அப்பத்தை விட.
..
பாத்தியா ஓதி
பள்ளிவாசலில் தின்னும்
சர்க்கடையை விடபுரட்சி எத்தனை
இனிப்பானது தெரியுமா?
..
எப்படி இனிக்கும்?
..
லட்டுவைப்போலக் கிறங்க வைக்குமா?
சாக்கலேட் போல எச்சி ஊறுமா?
சொல்லத்தெரியவில்லை எனக்கும்
என்றாலும் - அது
அப்பேர்ப்பட்ட இனிப்பு!
..
முதல் சக்கலேட்டுக்காக நீ
அம்மாவிடம் அழுதாயே
அப்பாவிடம் அடம் பிடித்தாயே
அப்போது/உன் நாக்குக்கு மட்டும்
தெரிந்தா இருந்தது
சாக்கலேட்டின் இனிப்பு?
..
எனக்கும் அப்படித்தான்
எவ்வளவு அழுகிறாயோ
அவ்வளவு இனிப்பு
எவ்வளவு அடம் பிடிக்கிறாயோ
அவ்வளவு இனிப்பு
எவ்வளவு போராடுகிறாயோ
அவ்வளவு இனிப்பு.
..
அழு,அடம்பிடி,போராடு
பொறுக்க முடியாமல் போன பிறகாவது
உன் அப்பன் கேட்க வேண்டும்
"அப்படி என்னதாண்டா இருக்கு
அந்தப் புரட்சியில்" என்று.
..
-துரை.சண்முகம்
..
சென்னையில் நடந்த நவம்பர் புரட்சி நாள் விழாவில் குழந்தைகளின் குதூகலமாக பங்கேற்பைப் பார்த்தவுடன் எழுந்தது இந்தக் கவிதை.

No comments: