Sunday, February 10, 2008

இப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா !





இனியும், உன் தலை
நிலம் நோக்கி....?
வேண்டாம் இந்த வெட்கக்கேடு.
முற்றுபுள்ளியை
முதலில் அடிமைச்சாசனத்தின்
நெற்றியில் வை.
உன் கையில் பற்றியுள்ள
மரக்குச்சிகலைத் தூக்கித் தூற எறி.
ஆதிக்க வர்க்கங்களின்
விலா எலும்பினை உடைத்து
பறையிசை எழுப்பு,
அசுர கானம் முழங்கி
விழாவினைத் துவங்கு.....
எத்தனை நூற்றாண்டுகள்
நம் முதுகில் அவர்களின் கால்கள்?
அந்த வர்க்கங்களின்
நரம்புகளை உருவி, அதில்
அவர்களின் சுயநல
இதயங்களைக் கோர்த்து
வண்ணக் காகிதங்களைப் போல்
உன் வீதி முழுவதும்
தோரணங்கள் கட்டு
உணவு,
உடை,
வீடு,
நிலம்.... அனைத்தும் ஆக்கிரமித்த
அவர்களின் கோரப்பிடியிலிருந்து
அத்தனையும்
பறிமுதல் செய்து
எதுவுமே இன்றி நிற்கும்
உன் பாட்டாளித் தலைமுறையின்
பாதங்களுக்குக் கீழ் பரப்பு.
ஒவ்வொரு நெல் மணியும்
ந்ம் குருதியில் பிரசவித்த வலியை
நானும் நீயும் மட்டுமே
உணர்ந்திட முடியும்.
நம் வீட்டுப் பாத்திரங்களில்
காற்று நிரம்பி இருக்க,
விளைந்ததைத் தின்றுவிட்டுச்
செரிக்காமல் நடைபயிலும்
அவர்களுக்கு எப்படித் தெரியும்
நம் வயல் வெளித்தவங்கள்?
தெரிவிக்கத்தான் வேண்டும்
பூமியெங்கும் வேர்களாய்
நம் கால்களை இறக்கி
மரங்களென நின்று
அதையும் மீறி
யாராவது நம்மை அசைக்க
முயற்சித்தால்......
இதுவரை,
நிலத்தை மட்டுமே பிளந்த
கலப்பையின் கொழுவை உருவி
அவர்களின் நெஞ்சில் இறக்குவோம்.
எத்தனை நாள்தான்
நீயும் நானும் மட்டுமே
குருதியினைச் சிந்துவது?
***************************
கவிதையும், ஒவியமும்
முகிலன்

No comments: