Friday, February 15, 2008

நலம், நலமறிய நக்சல்பரி...

நக்சலைட்டுகளை
இயங்கவிடாமல் செய்துவிட்டதாம் அரசு
நம்புகிறார்கள் சிலர்.
உண்மையில்
இயங்கமுடியவில்லை மக்களால்.
.
கத்திக்கு எத்தனைச் சாணைபிடித்தாலும்
ஒரு இழவு விசாரித்துவர
பேருந்து கட்டணத்தைப்
பிடிக்க முடியாமல்
துருப்பிடித்துக் கிடக்கிறது
தொழிலாளியின் வாழ்க்கை.
.
அங்கங்கே ஆள் வைத்து
பணத்தாலே கண்ணி வைத்து
எத்தனை முறை கிளப்பினாலும்
எழுப்ப முடியவில்லை
'எம்ப்ளாய்மெண்ட்' எண்ணை.
.
ராகு மூணாம் இடம் போகிறார்
கேது நாலாம் இடம் வருகிறார்
கேட்ட பவுனைப் போட முடியாததால்
அக்காமார்கள் மட்டும்
அடுப்படியிலேயே கிடக்கிறார்கள்.
.
ரேசன் அரிசி வடித்த கஞ்சியில்
சலவை செய்த உயிரை உடுத்தி உடுத்தி
ராத்திரி அறுப்புக்குப் போய் வந்து படுத்த
அம்மாவின் கண்கள்
கடைசிவரை திறக்கவே இல்லை..
.
ஊரெல்லாம் கடன்பட்டு
தலைமறைவு வாழ்க்கை நடத்தும்
உங்களுக்குத் தெரியாதா?
புரட்சிக்குக் கடன்படாமல்
இனி இயங்க முடியாது என்பது.
..
-துரை.சண்முகம்

Thursday, February 14, 2008

"சுயநல அறிவுஜீவிகள்"


"ஏ சுயநல அறிவுஜீவிகளே !

நீங்கள் தப்பமாட்டீர்கள் !
..
உங்களுடைய கவிதைகளிலும் கதைகளிலும்

இடம் பிடிக்க முடியாதவர்கள்

ஆனால்

உங்களுக்கு உண்டி சமைக்கும்

உங்களுடைய ஆடையை விடுக்கும்

உங்களுடைய காரை ஓட்டும்
உங்களுடைய பூந்தொட்டியைப் பராமரிக்கும்

உங்களுடைய நாயைக் குளிப்பாட்டும்

அவர்கள் வந்தவுடனே
விசாரனை துவங்கும்.

ஏழை பாழைகளான எங்கள் வாழ்வும் கனவும்

எரிநெரிப்பில் கருகிக் கொண்டிருந்தபோது

ஏ, சுகபோகிகளே, செளந்தர்ய உபாசகர்களே

நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?"

- ஆட்டோ ரெள காஸ்புலோ, சிலி

பசுத்தோல் போர்த்திய கேள்விகள்

என்னையும்
எப்படி இந்துவாக்கினர்?
..
யாரெல்லாம்
இசுலாமியர் இல்லையோ
யாரெல்லாம்
கிறித்தவர் இல்லையோ
என்பதில் தொடங்கி
யாரெல்லாம்
மனிதர்கள் இல்லையோ
என்ற பரிணாமத்தில்
மாட்டிக் கொண்டேனோ நானும்?
..
எப்படி நானும்
இந்துவாய்....
..
"சூத்திரன்"- என்ற சங்கரமடத்தின்
கழிப்பறை வாக்கியத்தை
பெரும் "பாக்கியம்"
என்று சுமந்து திரியும்
தாமரைக்கனியின்தோலைப்
போல
எனக்குத் தோல் தடிப்பில்லையே!
..
தமிழ் "நீச பாஷை" என்றுமுகம்
சுளிக்கும் சங்கராச்சாரிக்கு
அன்றாடம்"அம்மா"
என்று அழைக்கும்
என்மே கரிசனம் வந்ததெப்படி?
..
நான் சாணிபோடும்
ஓசைசமஸ்கிருதமோ?
எங்கள் குடும்பக்காளைகளைக
சாப்புக்கு அனுப்புவதைக்கண்டு
கொள்ளாமல்
எம் மேல் மட்டும்பாசம் வந்ததென்ன?
பெண்டாளும் தந்திரம்
மாடுகளை வரையிலுமா!
..
வேள்விகளில்
உயிரோடு எரிக்கப்பட்ட
எம் மூதாதையர்களின்
வாரிசுகள்
நாங்கள்வழக்காடுகிறோம்....
..
இந்துவாக
இருந்ததில்லை நாங்கள்
வைக்கோல் மொம்மைகளைக்
காட்டும் போனும்
வாஞ்சையுடன் சுரக்கும்எம்
..
பால்மடி
வழியும் கண்ணீரையும்
நடுங்கும்
முகங்களையும் கூட
விடாது
பசியாறும் இந்து மதவெறி
..
எப்படி நாங்கள்
இந்துவாக முடியும்?
..
எம் சந்ததிப் பகையே
சங்கர மடமேவேண்டாம்
விலகுஉழைக்காத வகையினம்
என்றுஎன்மேல் உள்ள குற்றச்சாட்டை
உறுதி செய்வதாய் இருக்கிறது
உனது ஒட்டுறவு
..
எப்படி பொருந்தும்?
கரப்பதே என் பாடுகறப்பதே
உன் பண்பாடு
பனிக்குடம் உடையும்
முன்பேசீம்பாலுக்குச் செம்பு தேடும்
உன் வக்கிரங்களுக்கு
மத்தியில்வாழ்வதைவிட
கன்றின் கறியை காமுற்ற
யாக்ஞவல்கியனின் சந்ததியிடம்
..
உயிர்பிச்சை பெறுவதைவிட
செத்த பின்பும்
சினை பார்த்து அறுக்கும்
எம் மக்களுக்கு உணவாகவே
எனக்கு சம்மதம்
.
இந்துவாக வாழ்வதைவிட
விலங்காகச் சாவதே
எனக்குச் சம்மதம்
..
-துரை.சண்முகம்

எப்படி இனிக்கும்?

பிள்ளைகளே,
புரட்சி எத்தனை இனிப்பானது
தெரியுமா?
..
அதிகாலை எழுந்து
அவசரமாக குளித்து
..
நீங்கள் தின்னும்
தீபாவளிப் பலகாரங்களை விட
சகல பணிவோடும்
..
சர்ச்சுகளில் நீங்கள் சுவைக்கும்
அப்பத்தை விட.
..
பாத்தியா ஓதி
பள்ளிவாசலில் தின்னும்
சர்க்கடையை விடபுரட்சி எத்தனை
இனிப்பானது தெரியுமா?
..
எப்படி இனிக்கும்?
..
லட்டுவைப்போலக் கிறங்க வைக்குமா?
சாக்கலேட் போல எச்சி ஊறுமா?
சொல்லத்தெரியவில்லை எனக்கும்
என்றாலும் - அது
அப்பேர்ப்பட்ட இனிப்பு!
..
முதல் சக்கலேட்டுக்காக நீ
அம்மாவிடம் அழுதாயே
அப்பாவிடம் அடம் பிடித்தாயே
அப்போது/உன் நாக்குக்கு மட்டும்
தெரிந்தா இருந்தது
சாக்கலேட்டின் இனிப்பு?
..
எனக்கும் அப்படித்தான்
எவ்வளவு அழுகிறாயோ
அவ்வளவு இனிப்பு
எவ்வளவு அடம் பிடிக்கிறாயோ
அவ்வளவு இனிப்பு
எவ்வளவு போராடுகிறாயோ
அவ்வளவு இனிப்பு.
..
அழு,அடம்பிடி,போராடு
பொறுக்க முடியாமல் போன பிறகாவது
உன் அப்பன் கேட்க வேண்டும்
"அப்படி என்னதாண்டா இருக்கு
அந்தப் புரட்சியில்" என்று.
..
-துரை.சண்முகம்
..
சென்னையில் நடந்த நவம்பர் புரட்சி நாள் விழாவில் குழந்தைகளின் குதூகலமாக பங்கேற்பைப் பார்த்தவுடன் எழுந்தது இந்தக் கவிதை.

"காட்டு நடனம்"

சித்திரவதைச் செய்யப்பட்ட
எங்கள்
மார்புகளில் இருந்து
வசீகர வயலின்கள்
உயிர்த்தெழும்பும்
சுருள் வேலிக் கம்பிகள்
அவற்றின் தந்திகளாய்
நாதமெழுப்பும்
உடைந்த
எழும்புத் துண்டுகளோ
புல்லாங்குழல்களாய்
முகிழ்த்தெழும்பும்
அங்கு
ஒரு காட்டு நடனம்
அனல் கக்கும்.
..
- மிக்கிஸ் தியோடோ ராகிஸ்
(கிரேக்க கவிஞர், அரசியல் ஆய்வாளர்)

Monday, February 11, 2008

இலவசம் வந்தது; இல்லம் தொலைந்தது!


வந்து சேர்ந்தது வீட்டுக்கு
வண்ணத் தொலைக்காட்சி
வைத்துப் பார்ப்பதற்கேற்ற
வாட்டமான இடம்
விவாதத்துக்கிடையில்
ஒருவழியாக முடிவானது
கூடத்து மூலையில் கிடந்த
கிழவியின் படுக்கை
திண்ணைக்குப் போனது
கேட்க ஆளின்றி
பாட்டியின் கதைகளும்,அனுபவமும்
பேச்சு மறந்து வீணாய்ப் போனது.

ஆட்டிவிடும்போது
தொலைகாட்சிக்கு
அடிபட்டுவிடும் என்று
குழந்தையின் தொட்டிலும்
கழட்டப்பட்டது முன்வாசலில்
கேபிள் கொடி படர்வதற்கு
இணங்காத
முருங்கையின் கிளை
முறிக்கப்பட்டது.

ஆறுமணி தொடர் பார்ப்பதற்கு
ஊறு நேராதவாறு
ஐந்து மணிக்கெல்லாம்
கோழியின் கூடை கவிழ்க்கப்பட்டது
தண்ணீர் வேண்டி கத்திப்பார்த்த
சினையாடு
கண்டு கொள்ள ஆளில்லாமல்
வேலிதாண்டி கர்ப்பம் கலைந்தது.

படாத இடத்தில்
தொலைக்காட்சிக்குப்
பட்டுவிட்டால் வருமா எனப்பயந்து
பையனின் 'ஒளிந்து பிடித்து'
விளையாட்டும்
வீட்டை விட்டு விரட்டப்பட்டது.

விளம்பர இடைவேளைக்கிடையே
கொஞ்சம் விசாரிப்பு பின்பு
வெடுகென்று முகத்தை திருப்பி
'கோலங்கள்'
குடும்பத்தின் 'கவனிப்பு' தாங்காமல்
சொல்லாமலே ஓடிப்போனான்
சொந்தக்காரன்.
தொலைக்காட்சிப் பூவில்
தேனெடுக்கத் தவித்து
சுருண்டு விழுந்த வண்டைப் பார்த்து
பரிதாபத்தோடு
'இச்சு' கொட்டியது பல்லி.

மனிதக்குரலற்று வெறிச்சோடிய
வீதியைப் பார்த்துபீதியுற்று
அலறியது தெருநாய்
கதவைத் திறந்து கொண்டு
வந்தவனின்
மனிதக்குரைப்பைக் கேட்டு
நடுங்கிப் போனது நாய்.

"ச்சீ...நல்ல நாடகம் ஓடுறப்ப
இங்க வந்தா கத்துற நாயே...!" என
அடிக்கப் பாய்ந்து வந்த
குடும்பத்தலைவனின் விழிகளில்
இதற்கு முன் இப்படியொரு
வெறித்தனத்தைப்
பார்த்திராத தெருநாய்
உயிர்ப்பிழைத்தால் போதுமென்று
ஊரை விட்டே ஓடியது.

துரை.சண்முகம்

இயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம்


பொதுவாய்ப் பேசினால்
புரட்சிக்குக் கூட
ரசிகர் மன்றங்கள் கூடும்.

கொஞ்சம்
குறிப்பாய்ப் பேசுவோமே.

எந்தக் கவிதை
நான் பாட
கண்ணில் தெரியும் பூக்களையா
காலில் குத்தும் முட்களையா
இலக்கியத் தேனீக்களுக்கு
எங்களிடம் சரக்கில்லை.

முதலில் கவிதைகளைக்
காயப்படுத்துவோம்
உள்ளேயிருப்பது
ரத்தமா, சீழா என்ற ரகசியம்
தெரியும் அப்போது.

அசை போட்டாலே
போதுமென்றால்
இங்கு மாடுகள் கூட
மரபுக் கவிஞர்கள்

வார்த்தைகளை அசைப்போட்டல்ல
வாழ்க்கையை அசைப்போடு
வரட்டும் புதுக்கவிதை.

எல்லா இன்பங்களையும்
சாதாரணமாக்கிவிடுகிறது
கம்யூனிஸ்டாய்
வாழ்வதன் இன்பம்.

எல்லா துன்பங்களையும்
சாதாராணமாக்கிவிடும்
கம்யூனிச உணர்வை
இழப்பதன் துன்பம்.

சிலருக்குக்
கம்யூனிசம் பிடிக்கிறது
கட்சி பிடிக்கவில்லை.
தேனை பிடிக்கிறது
மகரந்தக் கிண்ணம்
பிடிக்கவில்லை.

எல்லாம் சரி
எப்போது வரும் புரட்சி
எப்போது வரும் மழை
என்பது போல
மலைக்கிறார்கள் சிலர்.

வானில் இடிபாடுகள்
இருந்தால் மட்டும் போதாது
வளி மண்டலத்தின்
வலுவான இயக்கமின்றி
வராது மழையும்.

வாழ்க்கையில் இடிபாடுகள்
இருந்தால் மட்டும் போதாது
வலுவான இயக்கமின்றி
வராது புரட்சி கூட.
வாருங்கள் இயக்கத்திற்கு!

- துரை. சண்முகம்

வசந்தத்தின் இடி முழக்கம்

இடி முழக்கங்கள்
இல்லாதது போல்
தோன்றும் காலமிது
..
வசந்தங்களின் வழியிழந்து
விடியலின் பூபாளங்கள் பொய்யாய்ப்
பழங்கதையாய் மெல்லப் போனதுவாய்
புரட்சியையும் தோன்றச் செய்யும்
புரட்டல்களின் காலமிது.
..
கல்கத்தாவின் வீதிகளில்
உறைந்த இரத்தத்தில்
உதிரக் கவுச்சியில்
இந்த தேசத்தின் புரட்சி
வரலாறு பொதிந்து கிடக்கிறது.
..
முதலாளித்துவம்
மார்க்கண்டேயவரம்
பெற்றதாய்
மறுபடியும் மறுபடியும்
உச்சாடனங்கள்!
..
நெரிக்கப்பட்ட குரல் வளைகளிலிருந்து
எழும்பிக் கொண்டிருக்கின்றன
சொற்கள் - இந்த முறை
வசந்தம் வந்தே தீரும்.
..
- அரசு

Sunday, February 10, 2008

இப்படி இருக்கட்டும் நாளைய திருவிழா !





இனியும், உன் தலை
நிலம் நோக்கி....?
வேண்டாம் இந்த வெட்கக்கேடு.
முற்றுபுள்ளியை
முதலில் அடிமைச்சாசனத்தின்
நெற்றியில் வை.
உன் கையில் பற்றியுள்ள
மரக்குச்சிகலைத் தூக்கித் தூற எறி.
ஆதிக்க வர்க்கங்களின்
விலா எலும்பினை உடைத்து
பறையிசை எழுப்பு,
அசுர கானம் முழங்கி
விழாவினைத் துவங்கு.....
எத்தனை நூற்றாண்டுகள்
நம் முதுகில் அவர்களின் கால்கள்?
அந்த வர்க்கங்களின்
நரம்புகளை உருவி, அதில்
அவர்களின் சுயநல
இதயங்களைக் கோர்த்து
வண்ணக் காகிதங்களைப் போல்
உன் வீதி முழுவதும்
தோரணங்கள் கட்டு
உணவு,
உடை,
வீடு,
நிலம்.... அனைத்தும் ஆக்கிரமித்த
அவர்களின் கோரப்பிடியிலிருந்து
அத்தனையும்
பறிமுதல் செய்து
எதுவுமே இன்றி நிற்கும்
உன் பாட்டாளித் தலைமுறையின்
பாதங்களுக்குக் கீழ் பரப்பு.
ஒவ்வொரு நெல் மணியும்
ந்ம் குருதியில் பிரசவித்த வலியை
நானும் நீயும் மட்டுமே
உணர்ந்திட முடியும்.
நம் வீட்டுப் பாத்திரங்களில்
காற்று நிரம்பி இருக்க,
விளைந்ததைத் தின்றுவிட்டுச்
செரிக்காமல் நடைபயிலும்
அவர்களுக்கு எப்படித் தெரியும்
நம் வயல் வெளித்தவங்கள்?
தெரிவிக்கத்தான் வேண்டும்
பூமியெங்கும் வேர்களாய்
நம் கால்களை இறக்கி
மரங்களென நின்று
அதையும் மீறி
யாராவது நம்மை அசைக்க
முயற்சித்தால்......
இதுவரை,
நிலத்தை மட்டுமே பிளந்த
கலப்பையின் கொழுவை உருவி
அவர்களின் நெஞ்சில் இறக்குவோம்.
எத்தனை நாள்தான்
நீயும் நானும் மட்டுமே
குருதியினைச் சிந்துவது?
***************************
கவிதையும், ஒவியமும்
முகிலன்

நிலத்தைப் பழிக்கும் நெல்லுமிரட்டிகள்?

"கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தால்
கருத்துரிமை பறிபோகு" மென்று
முறுக்கிக் கொண்டு போன
கதாசிரிய நண்பனைக்
காணநேர்ந்தபோது
தயாரிப்பாளர் சொல்லச் சொல்ல
தயக்கமில்லாமல் தனது கதையை
நறுக்கிப் போடுக் கொண்டிருந்தான் அவன்.
..
"புரட்சி, போராட்டம் இதெல்லாம்
என் இளகிய இதயத்தில் - இயலாது
இயக்கத்தில் சேரமாட்டேன்" என
பழக்கத்தை முறித்துக் கொண்ட
பழைய நண்பனைப் பார்க்கப் போனால்
ஆட்டுக்கறி உரிப்பது போல
ஒரு பெண்ணின் அங்க அவயங்களை
பாட்டில் பச்சையாக உரித்துக் கொண்டிருந்தான்
" என்னடா இப்படி" என்றால்
சினிமாவில் சேர்ந்துவிட்டேன் என
சிரிக்கிறான் கோரமாக.
"இலக்கியவாதிகளுக்கே உரிய அடையாளம் கிடைப்பதில்லை....
கட்சிகள் வாகனமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன" என
காட்டமாகப் பேசிய இலக்கியவாதியை தேடிப் போனால்
" ஓ அந்த ஆம்வே (AMMY) ஏஜெண்ட்டா" என
அடையாளம் காட்டிகிறார்கள் தெருவாசிகள்.
"எனக்கு இலக்கியம் பண்ணத் தெரியும்
அரசியல் பண்ணத் தெரியாது" என்று
இரட்டுற மொழிந்து
விலகிச் சென்ற நண்பனை விசாரித்தால்
இப்போது பத்திரிக்கையாளர் குடியிருப்பில் வீடாம்.
எப்படியெனக் கேட்டால்
கனிமொழியின் இலக்கியச் சந்திப்பால் வந்த கோட்டா
என்கிறார்கள் கூட இருப்பவர்கள்.
..
"வீரமிக்க தமிழ்மணம்
இப்போது ஈழத்திலிருக்கிறது" என்று
கவியரங்குகளில் கைதட்டல்களை எழுப்பும்
அண்ணணைத் தேடினேன்,
'வாடி வாடி நாட்டுக்கட்டை' க்கு அடுத்த வரிகளைத் தேடி
அவர் ஆத்துப் பக்கம் போயிருப்பதாய்த் தம்பிகள் சொன்னார்கள்.
மலம் உருட்டும் வண்டுகள் கூட
வெளிப்படையாய் இறங்குகின்றன
மனங்கரத் துடிக்கும் இலக்கியவாதிகளே
நீங்கள் மட்டும் ஏன் இப்படி?
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் ஜூலை 2003 இருந்து
************************************************
(குறிப்பு: நெல்லுமிரட்டி என்பது நெல்லுடன் சேர்ந்து வாழும் நெற்பயிரைப் போலவே தோற்றமளிக்கும் களை)

அந்த நெருப்பின் அவலம் உங்கள் செஞ்சத்தைப் பற்றவில்லையா?





வீட்டில் புரையேறும்போதும்
யாரோ நினைப்பதாய்
உறவு பாராட்டும் உள்ளங்களே
வெளியே சிலர் போராடும்போது
நீங்கள் உறவாக நினைத்ததுண்டா?
தனது நெல்லுக்கும் கரும்புக்கும்
நியாயா விலை கேட்கிறான் விவசாயி
அவனது தற்கொலைக்கான மருந்தையும்
அந்நியக் கம்பெனிகளிடம்
வாங்கச் சொல்லி
வர்த்தகச் சட்டம் போடுகிறது அரசு.
கடனும் வட்டியுமே
கண்ணிகைகள் ஆனதனால்
தூக்கம் தொலைந்து
கண்ணின் நிறம்மாறிக்
கருஞ்சிவப்பு ஆனாலும்
அந்தக் கண்களின் ஈரத்தையும்
கரும்பின் கால்களுக்குத் தந்து நிதம்
பச்சையம் மாறாமல் பார்த்துக்
கொள்வான்
கரும்பு விவசாயி.
சமைந்து விட்டதற்கான சமிக்ஞையை
தோகைத் தாவணி அசைவிற்காட்டும்
கருப்பங்கொலை.
கட்டிக் கொள்ள
கவர்மெண்டும் தயாரில்லை
கட்டுப்படியான விலைக்குத்
தரகர்களும் வருவதில்லை.
கணுக் கணுவாய்
காயும் இளமை கண்டு சகிக்காமல்
கோதிவிட்ட தன் கைகளாலேயே
கொள்ளி வைக்கிறான் விவசாயி
அந்த நெருப்பின் அவலம்
உங்கள்
நெஞ்சத்தைப் பற்றவில்லையா?
..பூ லாரி தூக்கிக் கோவிலுக்குப்
போகையிலும் "நீ வாயும் வயிறுமா இருக்குறவ.
இங்ககொடு"
எனத் தான் வாங்கும் உள்ளங்களே.
..அதோ...தார்வாளியோடு
நடுரோட்டில் ஒருத்தி
அவளது கர்ப்பவெப்பத்தின்
காங்கல் தாங்காமல்
கருங்கல் ஜல்லியும் இடிந்து நொறுங்கும்
நீங்கள் ?
..எத்தனைச் சாலைகள் போட்டாலும்
ஊர்போய்ச் சேருவதில்லை
ஒப்பந்தத் தொழிலாளர்களின் வாழ்க்கை.
கால் இடித்தாலும்
"கட்டைல போவ!
ரோடு போட்டுவச்சானுவ"
என்று பொதுவாக திட்டும் உங்களுக்கு
.."சாலைப் பணியாளர்களை நிரந்தரமாக்கு
தனியாராக்காதே" என்று
கொதிக்கும் தாரிலிருந்து
ஒலிக்கும் அவர்களது குரல்
உறவில்லையா?
..
ஐஸ் வச்ச மீனு நல்லாயிருக்காது
அப்படியே வேணுமென்று
ஆசைப்படுவோரே.
உப்புக்காற்றை உள்ளே வாங்கி
வெறும் பீடி நெருப்ப்பில் இரவைத் தீய்த்து
ஆழ்கடலெங்கும் அலசினாலும்,
அந்நியக்கப்பல் மேய்ந்து விடுவதால்
வலைக்குள் வறுமையே அகப்படும்
நித்தம்
..ஐசில் வைத்துப் பாதுகாக்க
அவர்களுக்கு வசதியில்லை
அதோ அப்படியே கிடக்கிறது
மீனவன் பிணம்
ருசித்துத் தின்ற சொந்தங்களே
என்ன? இதையும்
ரசித்துப் பார்க்க இயலுமா?
..மயிலுக்குப் போர்வை கொடுத்தான்
பேகன் என்பதை
மனப்பாடப் பகுதியில் வைத்து
மரியாதை செய்யும் சுற்றத்தீரே!
இந்த மாகணத்துக்கே போர்வை தந்த
ஈரோடு, பவானி நெசவாளர்கள்
இப்போது அரசின்
இறக்குமதிக் கொள்கைக்கெதிராய்
வீதியிலே!
..என்ன மயிருக்குடா போராட்டம் என
மிரட்டும் தடைச் சட்டம்.
..உயிரிழை உருகும்
அந்த நெசவாளர்களுக்கும்
உங்கள் மானத்திற்கும்
உறவில்லையா, சொல்லுங்கள்?
..மின்சாரக் கட்டுமானப் பணியின் போது
காக்கை குருவிகள் போல
கம்பிகளில் அடிபட்டுச் செத்துப்போன
தொழிலாளர்களின் சாவை விடக்
கொடூரமானது
அதை
அந்நியன் ஆக்கிரமிக்குபோது
அசையாமல்
பார்த்துக் கொண்டிருப்பவர்களின்
வாழ்வு.
..
உங்கள் இருப்புப் பாதையின்
தாதுப் பொருள்
அதற்காக இறந்த தொழிலாளர்களின்
தண்டுவடம் என்றால் தப்பில்லை.
தேசத்தின் மிகப்பெரிய துயரம்
ஒருவேளை சோறில்லை என்பதல்ல
இந்தத் தேசம் நமதல்ல என்பதுதான்.
யார் தடுத்தாலும்
யார் தடை செய்தாலும் அதோ அவர்க்ள்
தொழிலாளர்கள், விவசயிகள்
மாணவர்கள்
வீதிக்கு வருகிறார்கள்.
..
ஓரமாய் ஒதுங்கி
வேடிக்கை பார்க்கும் விசித்திரங்களே
உங்களுக்கு வேறு வேலை இருக்கிறதா?
போங்கள்
..
வீட்டு வாசலில் உங்களுக்கான
அடிமை வரி காத்திருக்கிறது
" அய்யோ எங்களுக்குமா? " என்று
அலறும்போது
நீங்களும் தடை செய்யப்படுவீர்கள் !

தோழருக்காக ஒரு உதவி

ஒரு காந்தியால் ஏற்பட்ட
அகிம்சையின் இரணமே ஆறவில்லை
ஆயிரம் காந்தி அமைதி ஊர்வவலமா?
பகத்சிங் படையல்லவா
பாட்டாளிவர்க்கத்திற்குத் தேவை என்றேன்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்
வர்க்க ஸ்தாபனம் இல்ல தோழர்
என்றார் அந்த மார்க்சிஸ்டு கட்சி ஊழியர்.
மதவெறியை மாய்ப்போம்,
மனித நேயம் காப்போம் என்று
தட்டிக்குத் தட்டி கதை கட்டிவிட்டு
விநாயகர் சதுர்த்திக்குச் செட்டு போட்டு
இந்துவெறிக்குச் சிவப்புக் கொடி கட்டுவதுதான்
கம்யூனிசமா? என்றேன்.
தோ....ழ....ர் சி.ஐ.டி.யு வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் அழுத்தமாக.
அயல்நிதி வாங்கும் தன்னார்வக் குழுக்களுடன் சேர்ந்து
சுயநிதிக் கல்லுரி எதிர்ப்புப் பிரச்சாரமா?
மாணவர் சங்கம் உருப்படுமா என்றேன்,
மனப்பாடம் செய்தவர் போல
எஸ்.எப்.ஐ வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் திருத்தமாக.
மீன் குழம்புக்கும் விலைமாதருக்கும்
சோரம் போகிறவர்கள் தோழர்கள் என்று படமெடுக்கும்
குருதிப்புனல் கமலஹாசனுக்கும்
தேவர்மகன் பாரதிராஜாவுக்கும்
திரைப்பட விருதா என்றேன்.
த.மு.எ.ச வர்க்க ஸ்தாபனம் இல்ல
என்றார் தயக்கமின்றி.
தீபாவளி, திருவண்ணாமலை தீபத்திற்குச் சிறப்பிதழும்
ஆடிக் கிருத்திகைக்கு அழைப்பிதழுமாய்
தீக்கதிர் வந்து விழுகிறதே என்றேன்.
அது என்ன வர்க்க ஸ்தாபனமா
வெகுஜன பத்திரிக்கை தோழர் என்றார்
தனித்த சிரிப்புடன்.
'நானொரு பாப்பாத்தி' என்று
கோட்டையிலேயே சொன்ன ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து கொண்டு மதச்சார்பற்ற...ஜனநாயக....முற்போக்கு என்றீர்களே
கனவு என்னாயிற்று என்றேன்.
தோழர் உங்களுக்குச் சொன்னா புரியாது
என்பது போல
கன்னாபின்னாவென முகத்தைச் சுழித்தார்.
இந்த முறை அந்தத் தோழர்க்காக நாம் சொல்லுவோம்
" மார்க்சிஸ்டு கட்சி (CPI(M)) என்பதே
தொழிலாளி வர்க்க அமைப்பு (ஸ்தாபனம்) அல்ல"
..
துரை.சண்முகம்
..
புதிய கலாச்சாரம் செப் 2003 இருந்து

நாடகத்தில் இந்த முறையும்.....





புதிதாய் ஏதும் போதை தேவையில்லை
வாக்குறுதிகளே போதும்
..
தேர்தல் காலம் விசித்திரமானது
திகைக்க வைக்கும் மாற்றம் நிறைந்தது
..பாழாய்ப்போன குட்டிச் சுவரிலும்
சுவரொட்டி துளிர்க்கும்
சூரியஒளி புக முடியா
மூத்திரச் சந்திலும்
'சின்னங்கள்' பூக்கும்
ஒட்டடைக் கோலும் கையுமாய்
ஓடிவரும் சிலந்திகள் வீடுதேடி
..
வீடில்லாதவர் பக்கமோ
புதிய திட்டமிருப்பதாய்
கறையான்கள் கர்ஜிக்கும்
..
சாக்கடையை அறவே ஒழிக்கப்போவதாய்
கொசுக்கள் கோஷ்டி சேரும்.....
..
பழுத்த பன்றிகளோ
தங்கள் வாய் நாறாதென
சட்ட மலங்களுக்குள்ளேயே
சந்தனம் எடுப்பதாய்
'சிவப்பு' சூளுரைக்கும்.
..
இப்படிக்கூடவா?
கக்கூசுக்குள்ளும்
அக்கறையாய் பணி செய்ய காத்திருக்கும்
வேட்பாளர் பெயரோடு
'பெரியவாள்' ஆசி மணக்கும்.
..வெறுங்கையை நக்கிய வாழ்க்கையில்
வேறேதோ மாற்றமென்று
ஓட்டுச்சீட்டை ஓட்ட நக்க வந்தால்
..
வாக்காளர் பட்டியல் மேல்
விலைப்பட்டியல் விழுந்து
திரும்பவும் குடல் சரியும்
-துரை.சண்முகம்

எனது கவிதைகள்

"எனது கவிதைகள்
சாகட்டும்
போர்க்களத்தின்
சாதாரணச்
சிப்பாயைப் போல"
...
-கவிஞர் மாயகாவ்ஸ்கி

"புயல் மையம்"




தேர்தல் காலங்களில்
சூறாவளிச் சுற்றுப் பயணம்
..
சூறாவளி ஓய்ந்தபின்
வாக்காளர்களின்
பிணங்களின் மீதும்
வாக்குறுதி வழங்க
இன்னொரு பயணம்.
..
உங்கள்
ஒரு சொட்டு கண்ணீர்கூட
வெள்ள அபாயத்தை
அதிகரிக்கக் கூடும்
..
உங்களால் சாவதைவிடவும்
உங்களால் வாழ்வது கொடிது.
..
விதைக்க அகழந்த மண்ணையும்
வேரிலேயே பொத்திவைத்து
வியர்வையில் குளிர்விக்கும்
எங்கள் மேல்
எப்படி வந்தது இயற்கையில் சீற்றம்?
..
மாங்குரோவ் காடுகளை
நீங்கள் மேய்ந்தபோது
அறியவில்லை நாங்கள் -
..
உங்கள் வங்கிக் கணக்கில்
வலுவாக மையம் கொண்டுருக்கும்
மூலதனம்
வங்காள விரிகுடாவிலிருந்து
எங்களைக் காவு கொள்ளும் என்பதை.
..
காற்றுக்கு
உயிர்களை சுவாசிக்கவும்
தண்ணீருக்கு
இரத்தத்தைக் குடிக்கவும்
பயிற்றுவித்தது யார்-
நீங்கள்தானே?
..
புவி ஈர்ப்பு விசைகூடப்
பொதுவாக இல்லாத
நாடு இது - விளங்கிக் கொண்டோம்.
..தண்ணீர் வடிய வடிய
ஊற்றெடுக்கும் பிணங்களின்
விழிகளில் இருக்கிறது
எங்கள் வெள்ளை அறிக்கை.
..எஙக்ள் சாவுக்கு
என்ன விடை?
..
தூரத்திலிருந்து பார்ப்பவர்கள்
முணுமுணுக்கிறார்கள் -
"உலகம் அழியப் போகிறது"
..உண்மைதான்
உஙக்ள் உலகம் அழியத்தான் போகிறது.
..
துரை. சண்முகம்
டிசம்பர் 1999 புதிய கலாச்சாரம்

"விறலி விடு தூது"

அயல்நாட்டுக் கடனில்
அலங்காரம் செய்கிறாரகள் 'பாரதமாதாவுக்கு'
..
உதட்டு சாயத்திற்கு மட்டும்
உனது இரத்தம்
..
ஒப்பனைகளின் சுமைதாளாமல்
நெளிகிறது தேசியக்கொடி
..
பொட்டுவைப்பதும் இந்து தர்மம்
பொட்டுக் கட்டுவதும் இந்துதர்மம்
..
தயங்கும் தேசத்திற்கு புத்தி சொல்லி
தாராளமாய் விடுகிறார்கள் தூது
..
அப்பன் வருவான் மகன் வருவான்
ஜப்பான் வருவான் , அமெரிக்க வருவான்
தப்பென்று தள்ளாதே
எவன் வந்தாலும் 'இருப்பு' கொள்வாய்
இளைய பாரதமே !
..
காவிரியின் கழிமுகம் காய்ந்தாலென்ன
கருகும் குருத்துக்களை
கடல் நீரால் தலைமுழுகி
பெரும் இலாபமே ஒழுக்கமென்று
கயல்விழி காட்டி வலைகளோடு இணங்குவாய்
வளமான இறால் குஞ்சே!
..
குறிஞ்சி மலைத்தேனை
எவன் கொண்டு போனாலென்ன
வேப்பங்கனிகளையும்
வெளிநாட்டான் கொண்டாலென்ன
'கோக்கோ கோலாவின்' குளிரில் நனைந்தபடி
தேசம் ஒரு தேன் கிண்ணம்
திருமுடுதற்கோர் விலையென்று
உலகத்தரம் நோக்கி
உயர்ந்திடுவாய் பொன் வண்டே !
..வலையோசை எழுப்புதல் போல்
உன் அலையோசை கடல்மேனி
அந்நியனுக்களித்தாலோ அன்னியச் செலவாணி
உள்ளூர்ப் படகுகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு
பன்னாட்டு திமிங்கலத்தை
நெஞ்சாரத்ட் தழுவிடுவாய் நெய்தல் நித்திலமே!
..
தமிழனா,இந்தியனா?
தரம்பார்க்க தேவையில்லை
கடின உழைப்பாற்ற கைகள் இருந்தாலும்
இடமில்லையெனச் சொல்லி எறிந்துவிட்டு
'முதல்' கொண்டு வருபவனை
முல்லை மணங்கமழ வரவேற்று
கதவை திறப்பாய் கனிவான பாரதமே!
..
மருதத்தை நெய்தலாக்கி
மண்ணையெல்லாம் பாலையாக்கி
'தூது' தொடர்கிறது
'தூ'...மானம் போகிறது.
..
துரை. சண்முகம்

புதிய கலாச்சாரம் ஆக,செப்,அக் 1994

WTO என்றொரு ஆக்டோபஸ் !

ஓடு! ஓடு!
கடித்துக் குதறிவிடும்
ஓடு !
உயிர் பிழைக்கும் ஆசையில்லையா?
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
நீ நினைப்பதுபோல்
அது சைவமில்லை
'இவர்களை' நம்பி நிற்காதே! ஓடு !
.
'வெள்ளைப் புறா'
சமாதான சின்னமில்லை
அதன் கூட்டுக்குள்
எப்போதும் சதைத்துணுக்குகள்
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
புற்றுகளிலிருந்து
எறும்பு பிடித்துண்ணும்
குரங்குகளைக் கண்டதுண்டா?
கையில் ஒரு குச்சி
அதுதானிந்த அரசு
ஓடு ! ஓடு !
.உன் தலைமயிருக்கு
அவனிடம் இருக்கிறது
காப்புரிமை.
மொட்டையடிக்க முயற்சி செய்யாதே!
கத்தியும்
அவனிடமே இருக்கிறது.
ஓடு ! ஓடு ! ஓடிவிடு !
.
இனியெல்லாம் தனியார்மயம்தான்
வலதுகை ஒருவருக்கு
இடதுகை ஒருவருக்கு
விரல்கள் பத்தும்
வேறொருவருக்கு
சரி!
நகங்களுக்கு ஆயுள் காப்பீடு எடுத்துவிட்டாயா?
நகங்களில் அழுக்கெடுக்க
'புதிதாய்' அறிமுகமாகியிருக்கிறது.
ஐ.எஸ்.ஐ ம் முத்திரையுடன்
விலை வெறும்
ஐம்பதே ரூபாய்தான்!
வாங்கிவிட்டாயா?
.ஏய்? இதென்ன?
காதுகளை அறுத்துப் போட்டுவிட்டு
ஓடுகிறாய்!
ஓடு ! ஓடு !
.எங்கேதான் போகமுடியும்?
பூமியின் விளிம்புக்கு?
பிரபஞ்சத்தின் எல்லைக்கு?
ஓடு ! ஓடு !
.எல்லா வழிகளும்
அடைத்து விட்டன.
தவிர்க்க முடியாதினி!
.
மூடிய அறைக்குள்
மாட்டிய பூனை
என்ன செய்யும்?
..
அதுகூடவா
நம்மால் முடியாது?
சொல்! தொழிலாலர் வர்க்கமே!.
-தீபன்
புதிய கலாச்சாரம் பிப்ரவரி 2000

"நக்சல்பாரிகளின் கூட்டுப்பாடல்"



"காலியாய்க் கிடக்கிறது
அரிசிப் பானை
ததும்புகிற்து
விழிக்குடம்
இதயம் நோகிறது
தாயே உன்னை நான்
எப்படிக் காப்பாற்றுவேன்?
இனியும் நான்
இங்கே இருக்க முடியாது -
அதோ
மக்கள், படை செல்கிறது
மலைகள் அதிரும் ஒலிகேட்கிறது
மாட மாளிகை நொறுங்கும்
ஒலி கேட்கிறது
இனியும் என்னைக்
காத்திருக்க வைக்காதே
தாயே
நானும்
அங்கே போக வேண்டும்
விடியலைக் கீறிச்
சூரியனைக் கொண்டு வர!"

"நாளை உலகம்"


என் தெருவில்
தொகுதி எம்.எல்.ஏ
திண்ணையில் எம்.பி
.
சரியாக வரும்
நகரப் பேருந்து
தட்டுப்பாடு இல்லாத
தண்ணீர்க் குழாய் , மின்சாரம்,
கனிவுடன் மருந்து போடும்
அரசு மருத்துவர்,
வேலைக்கு ஆளின்றி
தேடி அலையும்
வேலை வாய்ப்பு அதிகாரி
உழுதவன் கணக்கில்
ஆயிரமாய் இலாபம்;
.
சுத்தமாய் நகரம்,
சுறுசுறுப்பாய் மக்கள்
தவறு கண்டு
இமை சிவக்கும்
இளைஞன்.
.
இவை
என் தாய்
என்னைத் தட்டி எழுப்பும் வரை.
..
-பி.செல்வராஜ்

சொல்லுங்கள்

தொழிற் சாலையின்
உயர்ந்த கூரைகளிலும்
மெளனம் கவிந்தது.
மெர்க்க்குரி விளக்குகளும்
துருப்பிடித்துப் போயின
..
ஆதிகாலக்
குகையைப் போன்ற
அர்த்தமற்ற இருளுக்கும்
நிசப்த்த்திற்கும்
யார் பொறுப்பு?
..
சுழன்று கொண்டிருந்த
எல்லாச் சக்கரங்களையும்
இயங்கிக் கொண்டிருந்த
எல்லா உயிர்களையும்
ஒரு நொடிக்குள்
நிறுத்தி வைத்தது
யார்?
..
தங்களின்
கவலைகளையும்
கனவுகளையும்
சோகங்களையும்
நம்பிக்கைகளையும்
சுமந்து வந்த
நம்மை
முடமாக்கியது யார்?
..
கண்களை
எதிர் காலத்தைக்
குருடாக்கியது யார்?
..
அரை வயிற்றுக் கஞ்சிக்கும்
ஆடைக்கும்
நம்மை
அலைய விட்டவர்கள்
யார்?
..
அவர்கள்-
.
நிரம்பி வழியும்
மதுக் கிண்ணங்களோடு
தொழிற்சங்கத் தலைவரின்
தோள் மீது கைபோட்டுக்
கொண்டிருக்கிறார்கள்
ஒநாய்களையும்
நாய்களையும்
சட்டத்தையும்
காவலுக்கு வைத்துவிட்டு
குண்டு துளைக்காத
கூண்டுகளுக்குள்
பாதுகாப்பாக
இருக்கிறார்க்ள்.
..வேதப்புத்தகங்களை
பகவத் கீதைகளை
ரத்தக் கறைபடிந்த
விரல்களால்
புரட்டிக் கொண்டிருக்கிறார்கள்
.வருத்தப்பட்டு
பாரம் சுமக்கிறவர்களே
இவர்களை நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..உங்கள் குழந்தைகளின்
சின்னஞ்சிறு குடல்
குளிர்வதெப்போது?
..
உங்கள் பானைகளில்
சந்தோஷம், பொங்கி
வழிவதெப்போது?
..
உங்களை முடமாக்கியவர்களை
நீங்கள்
என்ன செய்யப் போகிறீர்கள்?
..
சொல்லுங்கள்.
*****************
-புதியஜீவா

பரவசம் !

உயிரிலிருந்து
உள்ளெழும்புகிறது நேசம்
பல சமயங்களில்
.
சொற்கள் கடந்த கவிதையாய்
சூழ்ந்து நிற்கிறது பரவசம்.
.
உண்மைகளை ஏந்தி வாழ்வதற்கும்,
பதாகையோடு
இணைந்து பயணிப்பதற்கும்,
வானில் எழும் பறவையாய்
உலகையே உள்வாங்கி
.
மெளனமாய் உவகை கொள்வதற்கும்
பெருமிதமாய் இருக்கிறது.
.வெல்வோம் என்ற வெளிச்சம் பட,
வாழ்க்கை மொத்தமும்
ஒளிர்கின்ற தருணங்க்ளில்.....
நம்பிக்கையோடு நிமிர்ந்து
யோசிக்கையில்
உடனடியாய் வேண்டும்
போலிருக்கும்
.
புரட்சி
..
-அரசு
..
புதிய கலாச்சாரம் மே 2000

உயிர்த்தெழு !



மெளனத்தை உடை.
மர உதடு திற
பேசு !
..
பூமியின் புன்னகையை
மீட்டுத் தரும்
வேட்கையோடு
..
முன்முளைத்த மரபுகளை
முறித்தெறியும் வேகத்தோடு
பேசு !
..
கலைகளின்
ஒப்பனைகளைக் கழற்றி
நிகழ்வின் காயங்களை
வலியின் கனத்தோடு
விவரி !
..
பூவெறிந்து
பாவெறிந்து
கண்ணீர் எறிந்து
..
கற்களைக் கரைக்கும்
முயற்சியைத் துற.
..
அர்த்தங்களின்
அடர்த்தி குறையாத
ஆவேசத்தோடு
வீசு சொற்களை!
..
வேர்வரை விழட்டும்
மடமைகள்
..
இயல்களைத்
தெரிந்து கொள்.
இசங்களைப்
புரிந்து கொள்
..
பேசு!
.
சீழ்பிடித்த
சிகரங்களின் உள்ளழுக்கை
உண்மை விரல்களால்
தொடு
..
முகவரிகளின்
அக வரிகளை ஆய்வு செய்
..
உன்னை
இயல்பாய் வெளிப்படுத்து
பேசு!
..
ஞானவெறி கொள்!
ஞாலவெளி பற.
-தீபன்
..
புதிய கலாச்சாரம் மே 2000

எதுங்கடா சமத்துவம் ?

காக்கி சட்டை மேசட்டை
போட்டுகிட்டு
கார்பரேஷன்ல வேல பாக்குற
சுந்தரேசு அண்ணனுக்கு மட்டுந்தான்
பீ,மூத்திரம் அள்ளுர வேல.
பழையபடியே....
.
பழைய சோறு கொழம்பு
வாங்குறதுக் கோசரம்
ஐயர் போகவா
மேகலை நகர் முத்தம்மா....
அதுவும்
புழக்கடை பக்கமா போனாத்தான்.
ஊருக்குள்ள
பொணம் விழுந்தா
வள்ளுவந் தெரு
வாசகி புருஷனுக்குச் சேதி வந்துடும்
எரிக்கவோ...புதைக்கவோ...
எப்பவுமே.
முதலியாரு
மூணு வயசு மவன கண்டாலும்
இடுப்புக்குத் துண்டு போகனும்
இல்லன்னா செருப்படிதான்
இப்பவும்
ச்சீசீ...
பெரிசா பீத்திக்காத
சமத்துவபுரமுன்னு.

-நீரை.ப.மகேந்திரன்