Monday, February 11, 2008

இயங்க மறுக்கும் இலக்கிய மனங்களோடு கொஞ்ச நேரம்


பொதுவாய்ப் பேசினால்
புரட்சிக்குக் கூட
ரசிகர் மன்றங்கள் கூடும்.

கொஞ்சம்
குறிப்பாய்ப் பேசுவோமே.

எந்தக் கவிதை
நான் பாட
கண்ணில் தெரியும் பூக்களையா
காலில் குத்தும் முட்களையா
இலக்கியத் தேனீக்களுக்கு
எங்களிடம் சரக்கில்லை.

முதலில் கவிதைகளைக்
காயப்படுத்துவோம்
உள்ளேயிருப்பது
ரத்தமா, சீழா என்ற ரகசியம்
தெரியும் அப்போது.

அசை போட்டாலே
போதுமென்றால்
இங்கு மாடுகள் கூட
மரபுக் கவிஞர்கள்

வார்த்தைகளை அசைப்போட்டல்ல
வாழ்க்கையை அசைப்போடு
வரட்டும் புதுக்கவிதை.

எல்லா இன்பங்களையும்
சாதாரணமாக்கிவிடுகிறது
கம்யூனிஸ்டாய்
வாழ்வதன் இன்பம்.

எல்லா துன்பங்களையும்
சாதாராணமாக்கிவிடும்
கம்யூனிச உணர்வை
இழப்பதன் துன்பம்.

சிலருக்குக்
கம்யூனிசம் பிடிக்கிறது
கட்சி பிடிக்கவில்லை.
தேனை பிடிக்கிறது
மகரந்தக் கிண்ணம்
பிடிக்கவில்லை.

எல்லாம் சரி
எப்போது வரும் புரட்சி
எப்போது வரும் மழை
என்பது போல
மலைக்கிறார்கள் சிலர்.

வானில் இடிபாடுகள்
இருந்தால் மட்டும் போதாது
வளி மண்டலத்தின்
வலுவான இயக்கமின்றி
வராது மழையும்.

வாழ்க்கையில் இடிபாடுகள்
இருந்தால் மட்டும் போதாது
வலுவான இயக்கமின்றி
வராது புரட்சி கூட.
வாருங்கள் இயக்கத்திற்கு!

- துரை. சண்முகம்

No comments: